Bigfoot Mystery | மனித உருவில் விசித்திர உயிரினம் - அமெரிக்காவில் அம்புலி?
கடும் நாற்றம்.. உறுமல் சத்தம்.. மனித உருவில் விசித்திர உயிரினம் - அமெரிக்காவில் அம்புலி? அலற விடும் பிக்ஃபூட் #bigfoot #bigfootfiles அமெரிக்காவில் பிக்ஃபூட் எனப்படும் மர்ம உயிரினம் குறித்த பழைய ஆவணங்களை வனத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 1982ஆம் ஆண்டு, அமெரிக்காவில் வடகிழக்கு ஓரிகன் பகுதியில் உள்ள உமட்டில்லா தேசிய வனப்பகுதியில் மூன்று இடங்களில் விசித்திரமான கால்தடங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து வனத்துறை விலங்கியல் ஆய்வாளர் ராட்னி ஜான்சன் ஆய்வு மேற்கொண்டார். கால்தடங்களின் வார்ப்புகளையும் அவர் எடுத்தார். எட்டு காரணங்களைக் குறிப்பிட்டு, அந்தத் தடங்கள் பிக்ஃபூட் உயிரினத்தினுடையவை அல்ல என அவர் தெரிவித்தார். இருப்பினும், அவை செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தால், மிகுந்த கவனத்துடனும் நுணுக்கத்துடனும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் வெளியான மற்றொரு அறிக்கையில், யாரோ திட்டமிட்டு உருவாக்கிய போலியான கால்தடங்கள் அவை என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, 1980ஆம் ஆண்டு மொன்டானா பகுதியில் லியோ கின்னி என்பவர் எழுதிய சாட்சியத்திலும் மர்ம உயிரினம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எல்க் எனப்படும் மானின் உடலைத் தேடி காட்டுக்குள் சென்றபோது, இரண்டு கால்களில் நடக்கும் விசித்திர உயிரினத்தின் கால்தடங்கள், கடுமையான நாற்றம் மற்றும் உறுமல் போன்ற சத்தத்தைக் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2003ஆம் ஆண்டு மொன்டானாவில் நூற்றுக்கணக்கான விசித்திரமான கால்தடங்கள் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு நாளிதழிலும் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் கனடாவின் ஒன்டாரியோவிலும், பிக்ஃபூட் தோற்றத்துடன் ஒத்த இரண்டு பெரிய உருவங்களைக் கண்டதாகப் பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். பிக்ஃபூட் உயிரினத்தின் இருப்பு இதுவரை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதுதொடர்பாக உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
