தமிழகத்தை உலுக்கிய இளைஞர் மரணம் | ஊர் மக்கள் ஆவேசம்
திருப்புவனம் இளைஞர் மரணம் - போராட்டம் - ஊர் மக்கள் ஆவேசம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் மர்ம மரணம் அடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட 7 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன... அதுவரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டமானது தொடரும் நிலையில், அஜித்தின் குடும்பத்தினரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மாவட்ட கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ரகசிய விசாரணை மேற்கொண்டார்...
இதனை எதிர்த்து கிராம மக்களும் உறவினர்களும் அந்த வீட்டை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்ற நிலையில், ஊர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது... இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவியது.
அஜித் தற்காலிக ஊழியராக பணியாற்றிய மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலை நோக்கி கட்டுக்கடங்காத கூட்டம் படையெடுத்து வந்து முற்றுகையிட முயன்ற நிலையில், போலீசார் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது... கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்...
அத்துடன் சிவகங்கை மாவட்டத்தின் துணை மாவட்ட செயலாளரும் திருப்புவனத்தின் பேரூராட்சி தலைவருமான திமுகவைச் சேர்ந்த சேங்கைமாறனின் காரை வழிமறித்து காரின் முன்பு அஜித்தின் உறவினர்கள் தர்ணா செய்தனர்...
இந்த சூழலில், தன் சகோதரனைக் கொன்றவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என அஜித்தின் சகோதரி ஆவேசமாக கோரிக்கை வைத்தார்...
