மனநலம் குன்றிய நபரை கொடூரமாக தாக்கும் இளைஞர்

x

நாகையில் மனநலம் குன்றிய நபரை, இளைஞர் ஒருவர் கட்டையால் கொடூரமாக தாக்கும், பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிய பெரும் பரபரப்பை அங்கு ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம், திருப்பூண்டி மேற்கு அச்சக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். தாய் தந்தையரை இழந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், இவரது சகோதரர் நீலமேகம் மலேசியாவில் வசித்து வருகிறார்.

இதனிடையே இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கும் கனகராஜ், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் கல் எறிவதும், கூச்சல் இடுவதும் வாடிக்கையாக தெரிகிறது.

இந்நிலையில் கனகராஜ் எதிர் வீட்டில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீடு மீது நேற்று இரவு கனகராஜ் கல் எரிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் விக்னேஸ்வரன் ஆகியோர் பூட்டி இருந்த கனகராஜ் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

அப்போது தற்காப்புக்காக கனகராஜ் வீட்டிலிருந்த இரும்பு பைப்பை வைத்து தடுத்துள்ளார். இதனிடையே கனகராஜன் வீட்டின் கொல்லைப்புறமாக அத்துமீறி நுழைந்த விக்னேஸ்வரன் அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட கனகராஜை கட்டையால் தலை மூஞ்சி என கண்மூடித்தனமாக அடித்து தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மனநலம் குன்றிய கனகராஜ் ரத்த வெள்ளத்தில் கத்தி கதறி தன்னை விட்டு விடுமாறு கெஞ்சி உள்ளார்.

பதைபதைக்கும் இந்த காட்சிகள் அனைத்தும் கனகராஜின் பாதுகாப்புக்காக அவரது சகோதரர் வாங்கி வைத்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கொடூர தாக்குதலுக்கு ஆளான கனகராஜை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்