திருமணமான ஆறே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, திருமணமான ஆறே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபிலா மேரி, இணையம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த நிதின்ராஜ் இருவரும், கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. மேல்மிடாலம் பகுதியில் ஜெபிலா மேரியின் பெற்றோர் வாங்கிக் கொடுத்த வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். நிதின்ராஜ் வேலைக்கு செல்லாத நிலையில் ஜெபிலா மேரி, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், பணி முடித்து வீடு திரும்பிய ஜெபிலா மேரி, தனது அறைக்குச் சென்று தூங்கியுள்ளார். அப்போது வெளியே சென்ற நிதின்ராஜ், மீண்டும் வீடு திரும்பியபோது, ஜெபிலா மேரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
ஜெபிலா மேரி தற்கொலை செய்த அறைக்குச் சென்று போலீசார் பார்த்தபோது, அவரது டைரியில் எட்டு பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அதில், தனது விபரீத முடிவுக்கு கணவர் வீட்டார் யாரும் காரணம் இல்லை என்றும், தனது கணவரை தான் ரொம்ப சிரமப்படுத்தி விட்டதாகவும் எழுதியுள்ளது தெரியவந்தது.