செல்போனில் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி
செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அப்துல் வகாப் தெருவில் உள்ள மளிகை கடையில் வேலை செய்பவர் நேபாள நாட்டைச் சேர்ந்த ரோஷன் 25. இவர் இன்று அதிகாலை மளிகை கடையின் 2வது மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து தவறி அருகில் உள்ள சிறிய கட்டிடத்தின் மீது விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமும், இடது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரது முனகல் சத்தம் கேட்டு அதிகாலையில் அருகில் உள்ளவர்கள் செங்குன்றம் காவல் நிலையத்திற்கும், செங்குன்றம் தீயணைப்பு துறைaக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி பைன் போர்ட் மூலம் ரோஷனை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள பாடியநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் பேசிக் கொண்டே மாடியில் தவறி விழுந்த நேபாள தொழிலாளியால் செங்குன்றத்தில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
