60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பெண் - பைப்பை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராட்டம்
வெங்கடலட்சுமி என்பவர், தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்றிரவு நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென அங்கிருந்த தரைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளார். சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில், 15 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்துள்ளது. நீச்சல் தெரியாத வெங்கடலட்சுமி, கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை பிடித்தவாறே விடிய விடிய பரிதவித்துள்ளார். இந்நிலையில், விவசாய நிலத்தின் உரிமையாளரான சுப்பிரமணி என்பவர், கிணற்றில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என எட்டிப்பார்த்த போது, பைப்பை பிடித்தவாறு இருந்த வெங்கடலட்சுமியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதுகுறித்து அவர் தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, வெங்கடலட்சுமியை மீட்டனர். இரவு முழுவதும் தண்ணீரில் நனைந்ததால், குளிரில் உடல்நிலை மோசமடைந்த வெங்கடலட்சுமி, பின்னர், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
