

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த 35 வயதான பிரியங்கா தனது கணவர் சீனிவாசனை பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த வாணியமல்லி கிராமத்தில் காட்வின் டோமினிக் என்பவருடன் வசித்து வந்தார். டோமினிக் நடத்தி வந்த நாய் பண்ணையையும் அவர் பராமரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தங்கை பிரியங்காவை காணவில்லை என செகந்திராபாத்தில் வசித்து வரும் அவரது அண்ணன் ஆன்லைன் புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியமல்லி கிராமத்தில் உள்ள நாய் பண்ணைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளம்பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்டு நாய் பண்ணையில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து புதைக்கப்பட்ட பிரியங்காவின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.