கடையில் வாங்கிய வாட்டர் பாட்டில் - குடிக்கும் போது காத்திருந்த அதிர்ச்சி

x

திருக்கோவிலூரில் குடிநீர் பாட்டில் மொத்த விற்பனையகத்தில் வாங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் இருந்த தூசி துகள்களால் பொதுமக்கள் அதிர்ச்சி; உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் பாட்டில் மொத்த விற்பனை கடை ஒன்றில் விழுப்புரத்தை சேர்ந்த திருமால் முருகன் என்பவர் 20 ரூபாய் கொடுத்து இரண்டு லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாதி தண்ணீரை குடித்து விட்டு பார்த்தபோது தண்ணீர் பாட்டிலில் உப்பு துகள்கள் போன்று அதிக அளவில் தூசியிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திருமால் முருகன் கடை விற்பனையாளரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அதற்கு கடையில் இருந்த விற்பனையாளர் இது காற்று குமிழ்களாக இருக்கும் அல்லது நீங்களே போட்ட தூசிகளாக இருக்கும் என பதிலளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் திருமால் முருகன் பணம் செலுத்தி இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலை வாங்கி பார்த்த போது அதிலும் அதிக அளவில் உப்பு துகள்கள் போன்ற தூசிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் 14ஆம் தேதி அடைக்கப்பட்ட இந்த குடிநீர் பாட்டில் டிசம்பர் மாதம் காலாவதியாகும் சூழலில் தண்ணீர் இதுபோன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திருமால் முருகன் உடனடியாக சம்பந்தப்பட்ட குடிநீர் பாட்டில் நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்