விமான டிக்கெட் ஏஜென்சி நடத்தியவரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி

விருத்தாச்சலத்தில் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்சி நடத்தியவரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
விமான டிக்கெட் ஏஜென்சி நடத்தியவரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி
Published on
விருத்தாசலம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவர் வெளிநாட்டிற்கு விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த பர்கத் அலி என்பவர் சாதிக் அலியை போன் மூலம் தொடர்பு கொண்டு, மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிந்து வருவதாகவும் தற்போது ஜெர்மனி நாட்டில் இருப்பதாகவும், ஜெர்மனியில் பணிபுரியும் தன் மகனை உடன் அழைத்து வர வேண்டி உள்ளதால் டிக்கெட் புக் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சாதிக் அலி 10 ஆயிரம் ரூபாய்க்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இதையடுத்து சாதிக் அலியை மீண்டும் தொடர்பு கொண்ட பர்க்கத் அலி, நண்பரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி தனக்கு 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதை நம்பிய சாதிக் அலி, அவரது வங்கி கணக்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நண்பரின் குழந்தை இறந்து விட்டதாகவும், உடலை எடுத்துவர மேலும் 20,000 ரூபாய் தேவைப்படுகின்றது என்று கேட்டுள்ளார். அதையும் நம்பிய சாதிக் அலி, வங்கிக் கணக்கிற்கு மீண்டும் 20 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். வெவ்வேறு வங்கிக் கணக்குகளை கொடுத்ததால் சந்தேகமடைந்த சாதிக் அலி, பர்க்கத் அலி குறித்து விசாரித்துள்ளார். அதில் மங்கலம்பேட்டையில் பர்க்கத் அலி என்ற பெயரில் டாக்டர் யாரும் பணிபுரியவில்லை என்றும் தான் ஏமாற்றப்பட்டிருப்பதும் அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சாதிக் அலி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பில்லூர் சாலையில் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த பர்க்கத் அலியை மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் முழுவதும் இதேப்போல டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தும் 150 பேரிடம் 50 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பர்க்கத் அலியை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com