பூமி தட்டுகளில் கொடூர மாற்றம்.. மீண்டும் ராட்சத பூகம்ப சுனாமிக்கு வாய்ப்பு
பூமி தட்டுகளில் கொடூர மாற்றம்.. மீண்டும் ராட்சத பூகம்ப சுனாமி - 2 லட்சம் மனிதர்கள் அழிய வாய்ப்பு
ஜப்பானில் 2011 ல் ஏற்பட்டதைப் போன்ற பயங்கர நில நடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியாகியிருக்கும் புதிய ஆய்வு முடிவு சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுபற்றி விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு...
ஜப்பானின் கடலுக்கு அடியில் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிஷிமா (Chishima) அகழியில் ஐந்து வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், டெக்டோனிக் தகடுகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகடுகள் இறுதியில் உடைந்து வெளியேறும்போது, அவை பேரழிவு தரும் பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பான் கடல் புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டோஹோகு பல்கலைக்கழகம் மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வில், 17 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கடைசி பெரிய பூகம்பத்திற்குப் பிறகு டெக்டானிக் தட்டுகள் இணைந்தே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு கடற்பரப்பில் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவிகளை நிறுவி டெக்டானிக் தகடுகளின் நகர்வை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
இதில், படிப்படியாக நகர்வதற்கு பதிலாக, தட்டுகள் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். அவை திடீரென நழுவினால், வெளியாகும் ஆற்றல் ரிக்டர் அளவுகோளில் 8.8
ஆக பதிவகும் நிலநடுக்கத்திற்கு சமமாக இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
எனவே, அடுத்த 30 ஆண்டுகளுக்குள் இந்தப் பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு
7 முதல் 40 சதவீதம் வரை இருப்பதாக அரசின் அறிக்கையும் மதிப்பீடு செய்துள்ளது.
கிரேட் ஈஸ்ட் ஜப்பான் பூகம்பம் என்று வர்ணிக்கப்படும், ஜப்பானின் கடைசி மெகா நிலநடுக்கம், 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ல்
மியாகி மாகாணத்திற்கு கிழக்கே 72 கிலோமீட்டர் தொலைவில்
9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இது ஜப்பான் வரலாற்றில்
பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும், 1900 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகளவில் ஏற்பட்ட நான்காவது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும் உள்ளது.
அத்தகைய நிலநடுக்கத்தால், 40 மீட்டர் உயரத்திற்கு மேல்
10 கிலோ மீட்டர் கடற்பரப்பு வரை மிகப்பெரிய சுனாமி தாக்கியது.
இந்தப் பேரழிவில் 19,759 பேர் உயிரிழந்தனர். 2,553 பேர் மாயமாகினர். புகுஷிமா அணுமின் நிலையமும் சேதமானது.
தற்போது விஞ்ஞானிகள் கணித்துள்ளதைப் போல, சிஷிமா அல்லது அருகிலுள்ள ஜப்பான் கடற்பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுமார் 1 லட்சத்து 99 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடும் என்றும், 5 லட்சத்துக்கும் அதிகமானோர்
காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயரும் நிலை வரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
2 லட்சத்து 20 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து 211 பில்லியன்
டாலர்கள் அளவுக்கு சேதம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர நிலநடுக்கத்துடன் வரும் சுனாமி மிகப்பெரிய ஆபத்து என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருப்பதால், ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.