'டிரான்ஸ் கிச்சன்' உணவகத்தை நடத்தி வந்த திருநங்கை கொடூர கொலை

கோவையில் திருநங்கைகளின் நலனுக்காக முன்நின்று செயல்பட்ட சங்கீதா என்ற திருநங்கை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'டிரான்ஸ் கிச்சன்' உணவகத்தை நடத்தி வந்த திருநங்கை கொடூர கொலை
Published on

கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் தலைவியாக இருந்தவர் 60 வயதான திருநங்கை சங்கீதா. திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் முன்நின்று இயங்கி வந்தவர் இவர்.

வேலையின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அவர்களை வைத்து சமையல் வேலைகளையும் நடத்தி வந்துள்ளார் ச​ங்கீதா. இதில் பல திருநங்கைகள் திருமண மண்டபங்களில் சமையல் வேலை பார்த்து வருமானம் ஈட்டி வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் திருமண மண்டபங்கள் எல்லாம் அடைக்கப்பட்ட சூழலில், அவர்களுக்காக டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை துவக்கினார் சங்கீதா.

பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கி வந்த இந்த ஹோட்டல் முழுக்கவே திருநங்கைகளால் நடத்தப்படுவது என்ற பெருமையை பெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் இதனை கோவையில் திறந்த சங்கீதாவுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகளும் குவிந்தன.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார் சங்கீதா. இந்த சூழலில் அவர் வீட்டின் அருகே துர்நாற்றம் வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்ததில் பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் அழுகிய நிலையில் கிடந்த சங்கீதாவின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த சங்கீதாவின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் என்பதால் கொலை 3 நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேநேரம் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் போட்டி காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதே நேரம் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சங்கீதா, திருநங்கை என்பதால் சிறுவயதிலேயே அவர் வீட்டில் இருந்து துரத்தப்பட்டுள்ளார். ஆனாலும் தனக்கு நேர்ந்த நிலை வேறு யாருக்கும் நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த சங்கீதா, தன்னை போன்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வந்துள்ளார்.

கோவையில் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தால் அவருக்கு பெயரும், புகழும் கிடைத்ததால் ஏற்பட்ட கோபத்தில் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனிடையே அவர் வசித்த வீடு மற்றும் ஹோட்டல் உள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்போன் அழைப்புகளை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது.

திருநங்கைகளின் நலனுக்காக களத்தில் நின்று செயல்பட்டு வந்த ஒரு செயற்பாட்டாளர் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை தாண்டி பெரும் இழப்பும் கூட..

X

Thanthi TV
www.thanthitv.com