ரயில் மோதி செங்கல் சூளை பணியாளர்கள் உயிரிழப்பு
ரயில் மோதி செங்கல் சூளை பணியாளர்கள் உயிரிழப்பு
சென்னை அடுத்த பட்டாபிராமில் ரயில் மோதி செங்கல் சூளை பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு
தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்த சோகம்
ஆபத்தை உணராமல் கை குழந்தைகளுடன் தண்டவாளத்தை கடந்து செல்லும் பொதுமக்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்.
சென்னை அடுத்த பட்டாபிராம் வயாலாநல்லூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருபவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆத்திமூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு, போளூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்.இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.வாரம் ஒரு முறை மார்கெட் பகுதிக்கு வந்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வாடிக்கை.இந்த நிலையில் வழக்கம் போல இருவரும் பட்டாபிராம் மார்க்கெட் பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு பட்டாபிராம் ரயில்வே நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் செல்லக்கூடிய தண்டவாளத்தை கடந்துள்ளனர்.அப்பொழுது அவ்வழியாக அதிவேகமாக வந்த சென்னையில் இருந்து ஹூப்ளி செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் மோதி தூக்கி வீசப்பட்டனர்.இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இது குறித்து உடனடியாக ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ரயில் மோதி இருவர் உயிரிழந்த விபத்து நடந்த போதிலும் ரயில்வே போலீசார் பலமுறை எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ரயில்வே நடைமேடையை பயன்படுத்தாமல் ஆபத்தான முறையில் பெண்கள் கை குழந்தைகள் அழைத்துக்கொண்டும்,வயதான முதியவர்கள் தள்ளாடி தண்டவாளங்களை கடந்து வருகின்றனர்.இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
