`1 ரூபாயில் தமிழக அரசின் வரவும், செலவும்' - தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட் ரிப்போர்ட் | TN Budget 2025
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு வரும் வருவாய் மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசுக்கு வரும் ஒரு ரூபாயில், 45.6 காசுகள் மாநிலத்தின் சொந்தவரி வருவாய் மூலம் பெறப்படுகிறது. 31.4 காசுகள் பொதுக்கடன் மூலம் பெறப்படுகிறது. மத்திய அரசின் வரி பங்காக 12 காசுகளும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயாக 5.9 காசுகளும், மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் மூலம் 4.9 காசுகளும், கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவாக 0.2 காசும் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படும் ஒரு ரூபாயில், உதவித்தொகை மற்றும் மானியங்களுக்கு 31.6 காசுகள் செலவிடப்படுகிறது. சம்பளத்திற்கு 18.6 காசுகளும், மாநில அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி செலுத்த 14.5 காசுகளும் செலவிடப்படுகிறது. மேலும் மூலதன செலவுகளுக்கு 11.8 காசுகளும், கடன்களை திருப்பி செலுத்த 9.7 காசுகளும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களுக்கு 8.5 காசுகளும் செலவிடப்படுகிறது. அதே போல், அரசு சார்பில் நடைபெறும் செயல்பாடுகள், பராமரிப்பு பணிகளுக்கு 3.5 காசுகளும், கடன் வழங்க 1.8 காசுகளும் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
