நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - முன்னேற்பாடுகள் தீவிரம் | Election 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன..

சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் தீவிரம்...

தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 5974 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன , இதில் 1100க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன..

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா உதவியுடன் நேரடி கட்டுப்பாட்டின் கீழும் , மற்ற வாக்குச்சாவடிகளில் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் வாயிலாகவும் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலில் பொருத்தமட்டில் மூன்று பொது பார்வையாளர்கள் , 15 மண்டல பார்வையாளர்கள் , 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என அதிகாரிகள் , 90 பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மாநகர காவல்துறையினர் உட்பட 27 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

நாளை நடைபெறும் வாக்குப்பதிவை யொட்டி நேரடி மற்றும் அவசர பயன்பாட்டிற்காக 12,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணிகளானது இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

இதற்காக மாநகரின் 15 மண்டலங்களில் 22 மையங்கள் அமைக்கபட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது...

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமின்றி மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் நடத்த தேவையான மை , அரக்கு உள்ளிட்ட பொருட்களுடன் , கொரனோ நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட மருத்துவ உபகரணங்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் உள்ளிட்ட சாதனங்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளன..

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி வகுப்பு இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில் பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த பிறகு வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மண்டல வாரியாக அறிவிக்கப்பட்ட 15 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணிகளும் நடைபெற உள்ளது........

X

Thanthi TV
www.thanthitv.com