

ஊராட்சி தலைவியான கூலித்தொழிலாளி : நேர்மையால் கிடைத்த பதவி என பெருமிதம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள காரைப்பட்டியை சேர்ந்தவர் சிகப்பாயி. 75 வயதான இவர், கூலி வேலை பார்த்து வருகிறார். காரைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிகப்பாயி, தள்ளாத வயதிலும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வந்தார். இந்த நிலையில் 540 வாக்குகள் பெற்ற அவர், ஊராட்சி தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேர்மையாக இருந்ததால் மக்கள் தன்னை ஏற்றுக் கொண்டதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
ஊராட்சி மன்ற தலைவரான பால்காரர்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பால் கடை நடத்தும் கலியுக நாதன் 3 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராகி உள்ளார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஊராட்சி தலைவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழ்மையில் இருந்தவருக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்
ஊராட்சி மன்ற தலைவராக தேர்வான இளைஞர்
தஞ்சை மாவட்டம் வேப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட சிவராஜன் என்ற இளைஞர் மாற்றுத் திறனாளி தாயின் வளர்ப்பில் வளர்ந்தவர். சிறுவயதிலேயே தந்தையையும் பறிகொடுத்த அவர், ஏழ்மையின் பிடியில் வளர்ந்து வந்துள்ளார். பாலிடெக்னிக் வரை படித்த இவர், தேர்தலில் போட்டியிட்டு தற்போது ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகி உள்ளார். மக்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தருவேன் என்றும் அந்த இளைஞர் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
ஊராட்சி தலைவராக 82 வயதான மூதாட்டி தேர்வு
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி தலைவராக 82 வயதான மூதாட்டி நல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஊராட்சி மன்ற தலைவராக மல்லிகா என்பவர் இருந்தார். அவர் இறந்த நிலையில் அவரின் மாமியாரான நல்லம்மாள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். .
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்ற பொறியியல் பட்டதாரி
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட 24 வயது பொறியியல் பட்டதாரி அரவிந்த், ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளார். நடுமுதலைக்குளத்தை சேர்ந்த அரவிந்த், தாய் - தந்தையை இழந்த நிலையில், தனது பாட்டி ஆதரவுடன் பொறியியல் பட்டம் பெற்றதுடன், வழக்கறிஞர் படிப்பும் முடித்துள்ளார். இளம்வயது கவுன்சிலரை கிராம மக்களும், நண்பர்களும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.