

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளொன்றுக்கு தமிழகத்தில் உள்ள 97 ஆயிரத்து 644 சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் 53 லட்சத்து 91 ஆயிரம் பயனாளிகளுக்கு முட்டை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு முதன் முதலாக மாநில அளவில் டெண்டர் கோரும் நடைமுறை கொண்டு வரப்பட்டது என்றும், மாவட்ட அளவிலான கொள்முதல் முறையில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டதால், மீண்டும் 2012 ஆம் ஆண்டு மாநில அளவிலான டெண்டர் கோரும் நடைமுறை அமலானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது என்றும், முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலையுடன் ஒப்பிட்டு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியே நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அதில் இடம் பெற்றுள்ளது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் 45 கிராமுக்கும் குறைவில்லாத ஏ கிரேடு முட்டை 4 ரூபாய் 34 பைசாவுக்கு வாங்கப்படுவதாகவும்,
ஜார்கண்டில் 5 ரூபாய் 93 காசுகளாகவும், ஆந்திராவில் 4 ரூபாய் 68 காசுகளாகவும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 2 ஆயிரத்து 31 கோடி அளவுக்கு தான் முட்டை கொள்முதலுக்கு செலவாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முட்டை கொள்முதல் தொடர்பாக அண்மையில் வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என்றும் அந்த செய்திக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.