கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி
கடந்த 2016 ஆம் ஆண்டு கடைகள், நிறுவனங்களின் பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள் குறித்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை, 365 நாட்களும் திறந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இதனை மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை முதலில் அமல்படுத்திய மகாராஷ்டிர மாநிலம், 2018ஆம் ஆண்டு முதல் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களையும், 365 நாட்களும் திறப்பதற்கான அனுமதியை வழங்கியது.
தமிழகத்தில், ஆண்டு முழுவதும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறப்பதற்கான பரிந்துரையை, தொழிலாளர் நலத்துறை ஆணையர், அரசுக்கு வழங்கியிருந்தார்.அதன்படி, பல்வேறு நிபந்தனைகளுடன் , அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும்.கூடுதல் நேரம் தேவையெனில் ஒரு நாளைக்கு பத்தரை மணி நேரமோ அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேலோ பயன்படுத்தக்கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்ற கூடாது, ஒருவேளை அதற்கான அவசியம் இருந்தால் அவர்களின் எழுத்துப்பூர்வமான சம்மதத்துடனே பணியில் ஈடுபடுத்த வேண்டும், அவ்வாறு பணியில் இருக்கும் பெண்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி : நாகப்பன், பொருளாதார நிபுணர் கருத்து
