TN Assembly | TN Govt | அக்.13 அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்,அக்.14 சட்டசபை கூட்ட தொடர்

x

தமிழக சட்டபேரவை வரும் 14-ந் தேதி கூடும் நிலையில், 13-ந் தேதியன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டபேரவை மீண்டும் வரும் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு கூட உள்ளது. இந்நிலையில் அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 13-ந் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார்.3 அல்லது 4 நாட்கள் சட்டசபை நடைபெறும் என கூறப்படுகிறது. சட்டசபை கூடும் முதல் நாளில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். விஜய்யின் பிரசார கூட்டத்தில் உயிரிழந்த, 41 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில், முக்கிய பிரச்சினைகளில் அரசின் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிய வாய்ப்புள்ளது. 2025-2026-ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை, சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.கரூர்‌ துயர சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி இடையே கடுமையான வாத, பிரதிவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பா.ம.க.வில் பிளவு ஏற்பட்ட பிறகு அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சந்திக்கும் முதல் சட்டபேரவைகூட்டத் தொடர் இதுவாகும். அதே போன்று அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் சந்திக்கும் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இதுவாகும்.


Next Story

மேலும் செய்திகள்