Thoothukudi | துடிக்க துடிக்க இறந்த உயிர் - விபத்தை ஏற்படுத்திவிட்டு நாடகமாடிய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் விபத்தை ஏற்படுத்திய காரை விற்றுவிட்டதாக நாடகமாடிய கார் உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் மரணமடைந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார், எட்டயபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விபத்தை ஏற்படுத்திய காரை ஒரு வருடம் முன்பு விற்றுவிட்டதாக அவர் நாடகமாடினார். போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், வழக்கிலிருந்து தப்பிக்க தர்மராஜ் தனது மகன் அருண்குமார், தம்பி சுப்புராஜ் மற்றும் சோலைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
