தூத்துக்குடி அருகே 2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள சவேரியார் புரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் லாரி டிரைவரான மரிய மிக்கேல்...
இவருக்கு மரிய நிரோஷா என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மகளும், மரிய கெனிஸ்டன் என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகனும் இருந்தனர்.
இவரது மனைவி சபிதா ரோனிகம் கடந்த ஆண்டு மரிய மிக்கேலை விட்டுப் பிரிந்து, வேறு ஒருவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மரிய மிக்கேல் முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட மனை உளைச்சல், அவரை தற்கொலை என்கிற விபரீத முடிவை நோக்கி தள்ளியிருக்கிறது.
ஆனால், தன் உயிரை மட்டும் மாய்த்துக்கொள்ளாமல், குழந்தைகளையும் சேர்த்து கொன்றுவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏன் தோன்றியது என தெரியவில்லை...
குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன் உள்ளிட்ட உணவுகளை மரிய மிக்கேல் வாங்கிக் கொடுத்த நிலையில், அதுதான் தங்களின் கடைசி உணவு என்று அறியாத குழந்தைகள் ஆசையாக சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாக தூங்கியுள்ளனர்.
பிள்ளைகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சமயம் பார்த்து, மின்சார ஒயர்களை எடுத்து வந்த மரிய மிக்கேல், அவர்களது கை, கால்களில் மின் ஒயர்களை இறுக்கிக் கட்டிவிட்டு, தன் உடலிலும் அந்த ஒயர்களைச் சுற்றிக் கொண்டுள்ளார்.
சுவிட்ச் ஆன் செய்யப்பட்டவுடன் மின்சாரம் பாய்ந்து, இரண்டு குழந்தைகளும் துடிதுடித்து இறக்க, மரிய மிக்கேலின் உயிரும் பிரிந்திருக்கிறது..
வீட்டிற்கு வெளியே படுத்திருந்த முதியவரான மரிய மிக்கேலின் தந்தை அந்தோணி முத்துவுக்கு, காலையில் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது..
அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் உடல்களில் மின்சார ஒயர் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.
மீள முடியாத அதிர்ச்சியோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது...
விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றிய போலீசார், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
