"கலைஞரின் வெற்றிக்கு இது தான் காரணம்'' வேள்பாரி வெற்றி விழாவில் நடிகர் ரஜினி பேச்சு
வேள்பாரி வெற்றி விழா - வாசகர்களால் நிரம்பிய அரங்கம்
தமிழக மக்களால் பெரும் வரவேற்பை பெற்ற வேள்பாரி நாவல், 1 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி, வணிக ரீதியதாக 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில், வேள்பாரியின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நாவலின் எழுத்தாளர் சு. வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன், சமூக செயற்பட்டாளர் ரோகிணி, இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த், நிதித்துறை செயலர் உதயசந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
வேள்பாரி நாவல் தமிழ் மக்களிடம் சென்று சேர்ந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், நாவலில் இடம்பெற்ற கதை மாந்தர்களின் பெயர்கள் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ளது, ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்த வெற்றி என சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
வேள்பாரி வெற்றி விழாவில் பேசிய நடிகர் ரஜினி காந்த், கலைஞரின் வெற்றிக்கு கலைதான் காரணம் என்றும், கலை சாதி, மத, பேதங்களை தூக்கி எரிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எழுத்தாளர் சு.வெங்டேசன் மதுரையில் வெற்றி பெற காரணம், வேள்பாரி கொடுத்த வெற்றி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
வேள்பாரி நாவலை பள்ளி, கல்லூரிகளின் பாடப்புத்தகத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும் இயக்குநர் ஷங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
வேள்பாரி நாவல் திரை மொழிக்கு மிக நெருக்கமாக படைக்கப்பட்ட நாவல் என்றும், தமிழ் மொழியில் வெளியான மிகச்சிறந்த புதினம் என்றும் நிதித்துறை செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். விழாவில் பேசிய சமூக செயற்பாட்டாளர் ரோகிணி, வேள்பாரி நாவலில் இடம்பெறும் பெண்களின் கதாபாத்திரம், பாலின சமத்துவத்துடன் அமைந்துள்ளதாக எழுத்தாளர் சு.வெங்கடேசனிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
