Thiruvallur | இன்சூரன்ஸ் பணத்திற்காக.. பெற்ற தந்தையையே கொன்ற கொடூரன்கள் - துடிதுடித்து பிரிந்த உயிர்
திருவள்ளூர் அருகே 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை, விஷப்பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த மகன்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இவர், கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு கடித்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. கணேசனின் மகன்களான மோகன் ராஜ் மற்றும் ஹரிஹரன் இருவரும், கடன் தொல்லையில் தவித்து வந்ததாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக 4 காப்பீடுகள் கணேசன் பெயரில் எடுக்கப்பட்டு இருந்ததும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. மேலும், தந்தை இறந்தால் காப்பீடு பணம் கிடைக்கும் என தந்தை பெயரில் காப்பீடு எடுத்து பீரிமியம் தொகை கட்டி வந்ததும், தந்தையை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் அம்பலமானது. இதற்காக, கூலிப்படை மூலம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு கட்டு விரியன் பாம்பை தயார் செய்து, அதை கணேசனை கடிக்க வைத்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மகன்கள் மோகன் ராஜ் , ஹரிஹரன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 கோடி ரூபாய் காப்பீடு பணத்திற்காகவும் , அரசு வேலைக்காகவும் சொந்த தகப்பனை, மகன்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
