சாதாரண வேலியில் பாய்ந்த மின்சாரம்..துடிதுடித்து இறந்த 3உயிர்கள்- ``அதிகாரிகள் அலட்சியம்?''
அங்கிருந்த கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு 100 க்கும் அதிகமானோர் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்.
இரண்டு பிள்ளைகளையும், பெற்ற தாயையும் பறிகொடுத்த வாலிபர் அந்த சாலையில் கனத்த இதயத்தோடு அமர்ந்திருந்தார்.
போராட்டக்காரர்களிடம் சூழ்நிலையை விவரித்து காவல்துறையினர் கலைந்து செல்லும்மாறு எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் மனம் மாறுவதாக இல்லை. மூன்று உயிர்கள் பறிபோனதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த இடத்தைவிட்டு நகர்வோம் என்பதில் திடமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து போக்குவரத்தை சீர்செய்வதற்கு வேறு வழியேயின்றி சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீஸ் கைது செய்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர்.
நடந்த பரப்பரப்புகளுக்கான காரணம் திங்கட்கிழமை மாலையில் நடந்த படுபயங்கரம்.
ஒரு நொடியில் மூன்று உயிர்கள் செத்து மடிந்துள்ளனர்.
என்ன நடந்தது என்பதை இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த தந்தையிடமிருந்தே விசாரணையை தொடங்கினோம்.
தன்னுடைய நிலை உலகத்தில் வேறு எந்த தகப்பனுக்கும் வரவே கூடாதென கலங்கி நிற்கும் இந்த நபரின் பெயர் அருள்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள ஆண்டாபுரத்தை சேர்ந்தவர். அன்பான மனைவி, 5 வயதில் மகன் சுஜித், 3 வயதில் மகள் ஐவிழி, குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா.. பாட்டி.. என அருளின் குடும்பம் மிகவும் அழகாக இருந்துள்ளது..
ஆண்டாபுரத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பருத்தி மற்றும் சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை மாலை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அருளின் தாய் இளஞ்சியும், அவருடைய பேர குழந்தைகளும் வாய்க்கால் வரப்பு வழியாக நடந்து சென்றிருக்கிறார்கள்.
அப்போது அவர்களின் நிலத்தின் அருகிலயே சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாயம் நிலமும் இருந்திருக்கிறது. பாதுக்காப்பு காரணங்களுக்காக சுப்பிரமணி அவருடைய விவசாய நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்திருக்கிறார்.
சம்பவம் நடந்தன்று இளஞ்சியும் அவருடைய பேரன் சுஜித் மற்றும் பேத்தி ஐவிழி ஆகிய மூவரும் சுப்பிரமணி நிலத்தின் அருகே போடப்பட்டிருந்த கம்பிவேலி அருகே நடந்து சென்றிருக்கிறார்கள். அப்போது மூவரின் உடலிலும் மின்சாரம் பாய்ஞ்சு தூக்கி வீசப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்கிற அதிர்ச்சியிலிருந்து அருள் மீள்வதற்குள் மூன்று பேரும் சம்பவ இடத்திலயே இறந்துப்போயிருக்கிறார்கள்.
சாதாரண கம்பி வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்தது எப்படி ? என விசாரணை தொடங்கி இருக்கிறது. அப்போது தான் சுப்பிரமணி தரப்பினர் ஒரு பகீர் தகவலை பகிர்ந்திருக்கிறார்கள்.
சென்ற ஞாயிற்றுகிழமை இரவு ஆண்டாபுரத்தில் கனமழை கொட்டி இருக்கிறது. அப்போது சுப்பிரமணி அவருடைய நிலத்தில் கம்பி வேலி அருகே அமைக்கப்பட்டிருந்த போஸ்ட் கம்பத்திலிருந்து மின்சாரம் கசிவதை உணர்ந்திருக்கிறார். உடனடியாக அவருடைய தரப்பிலிருந்து மின்சார வாரிய ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்ததாக சொல்லபடுகிறது. ஆனால், அதனை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி மறுநாள் இரவு வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டது தான் தற்போது 3 உயிர்கள் பலியாக காரணமென குற்றம் சாட்டுகின்றனர்.
