தாய் உயிரை எடுத்த மகன் வாங்கிய இரவல்
மகன் வாங்கிய கடனுக்காக தாய் கொலை - முன்னாள் BSF வீரர் கைது
திருவள்ளூர் அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். அதே கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கடிகாசலம் என்பவரிடம் வள்ளியம்மாளின் மகன் முருகன் என்பவர் 11 லட்ச ரூபாய் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முருகன் காட்பாடிக்கு வீடு மாற்றிக் கொண்டு சென்றுவிட்டதால், மகன் வாங்கிய பணத்தை திருப்பித்தரக்கோரி வள்ளியம்மாளிடம் கடிகாசலம் தொடர்ச்சியாக கேட்டு வந்துள்ளார். ஆனால் மூதாட்டி ஏதோ காரணம் சொல்லி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கடிகாசலம் கத்தியால் மூதாட்டியை தலையில் வெட்டியதில் வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு, கடிகாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
