நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்
Published on

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நகை, பணத்துக்காக வடமாநில கொள்ளை கும்பல் கொடூர கொலைகளை அரங்கேற்றும் காட்சிகளை திரையில் பார்க்கவே பதைபதைக்கும்.... ஆனால் மயிலாடுதுறை அருகே இந்த படத்தின் காட்சிகளை போலவே நிஜத்தில் நடந்திருப்பது நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது...

சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி. 50 வயதான இவர், தர்ம குளம் பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

வழக்கம் போல இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை ஆறரை மணிக்கு வீட்டின் கதவு தட்டப்பட்டிருக்கிறது.

வாசலில் இருந்தவர்கள் இந்தியில் பேசியதால் யாரென்று விசாரிக்க கதவை திறந்துள்ளார் தன்ராஜ் சவுத்ரி... கதவை திறந்த ஒரு விநாடிக்குள் அரங்கேறியது அந்த கொடூரம்... தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தன்ராஜை வெட்டியது அந்த கும்பல்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த மனைவி ஆஷாவை சமையலறையிலேயே வெட்டிப் போட்டது அந்த கும்பல். பின்னர் தடுக்க வந்த மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோரையும் கொடூரமாக வெட்டியது அந்த கொள்ளை கும்பல்.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த 16 கிலோ தங்க நகைகளை அள்ளியுள்ளது.

பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துக் கொண்டு தன்ராஜ் சவுத்ரியின் காரிலேயே தப்பிச் சென்றது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது 2 பேர் சடலமாகவும், 2 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதையும் அறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றியதோடு, காயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

இதனிடையே எருக்கூர் கிராமத்தில் சிலர் பதுங்கியிருப்பதாக கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க எஸ்.பி. தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அவர்களின் பெயர் மணிபால்,ரமேஷ், மணீஷ் என்பது தெரியவந்தது.

அப்போது அந்த கும்பல், துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டியதோடு தப்ப முயன்றது. கொள்ளையர்களில் ஒருவர் தாக்கியதில் எஸ்.பி.யின் உதவியாளருக்கு கையில் காயம் பட்டதாக கூறப்படுகிறது..... இதையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 3 பேரில் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர்...

மற்ற 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த 4 மணி நேரத்திற்குள் கொள்ளை கும்பலை போலீசார் பிடித்ததோடு, அவர்களிடம் இருந்த 16 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

கொலை, கொள்ளை, என்கவுன்ட்டர் என அடுத்தடுத்த அதிரடிகளால் சீர்காழியே பரபரப்பாக மாறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com