சமாதானம் பேசி அழைத்து வந்து தீர்த்துக்கட்டிய பயங்கரம்..
திருவொற்றியூர் டிஎஸ்ஆர் நகரிலுள்ள ஒத்தவாடை பகுதிவாசிகள் முந்தினம் இரவு நடந்த படுபயங்கரத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உறைந்து போயிருந்தனர்.இந்த சிறிய வீட்டில் கணவன், மனைவிக்கிடையே விடிய விடிய சண்டை நடப்பது வாடிக்கையான ஒன்று தான். ஆனால், அன்றிரவு நடந்த சண்டை ஒரு படுகொலையில் முடியுமென யாரும் எதிர்பார்க்கவில்லை..கொல்லப்பட்டவர் 35 வயதான ரேவதி, 16 வருடங்களுக்கு முன்பு ரேவதிக்கும் டைல்ஸ் ஒட்டும் கூலி தொழில் செய்து வந்து ரகு என்பவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.கல் முழுவதும் கடுமையாக வேலை பார்க்கும் ரகு பொழுது சாய்ந்ததும் கூட்டாளிகளோடு சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவு நடந்து வந்திருக்கிறது.
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் மொத்த சம்பாத்யத்தையும் கணவர் மது குடித்து அழிப்பதை ரேவதி கண்டித்துள்ளார். ஆனால், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தினமும் தலைக்கேறிய மதுபோதையில் வீட்டிற்கு திரும்பும் ரகு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் சென்ற வாரம் இதற்கு மேல் கணவரோடு சேர்ந்து வாழ கூடாதென முடிவெடுத்த ரேவதி ரகுவை பிரிந்து அவரின் தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.ஒருவாரகாலமாக நல்ல உணவிற்கு தவித்த ரகு மீண்டும் செவ்வாய்கிழமை மாலையில் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சமாதானம் பேசி இருக்கிறார்.பிள்ளைகளை பிரிந்து தன்னால் ஒருநாள் கூட வாழமுடியாதென கண்கலங்கிய ரகு இனிமேல் சத்யமாக குடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
கணவரின் பேச்சை மறுபடியும் நம்பி சமாதானம் ஆன ரேவதி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ஒத்தவாடை தெருவில் அவர்கள் குடியிறுக்கும் வாடகை வீட்டிற்கு வந்திருக்கிறார். இருவருக்கும் மீண்டும் லேசான மனகசப்பு ஏற்பட்டுள்ளது.உடனே பிள்ளைகள் இருவரையும் வேறொரு உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்ற ரகு மீண்டும் டாஸ்மாக் சென்று மது அருந்திவிட்டு வீடு திரும்பி இருக்கிறார். செய்த சத்யம் ஒரு நாள் கூட நிலைக்காததால் ஆத்திரமடைந்த ரேவதி ரகுவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருக்கிறார்.
ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த ரகு வீட்டில் காய்க்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் குத்தி இருக்கிறார். ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த ரேவதி சம்பவ இடத்துலயே துடிதுடித்து இறந்து போக ரகுவும் அதே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
நடந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் காயமடைந்த ரகுவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மது குடும்பத்திற்கு கெடு விளைவிக்கும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி.
