அண்ணா அன்று அடித்த மரண அடி - இன்று வரை எழாத தேசிய கட்சிகள்..இன்று வரை எழாத தேசிய கட்சிகள்

x

தமிழக அரசியல் வராலாற்றின் போக்கை மாற்றி அமைத்த

அறிஞர் அண்ணா பிறந்த தினம் இன்று. அவரின் பின்புலம்

பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

காஞ்சிபுரத்தில் ஒரு எளிய குடும்பத்தில், 1909 செப்டம்பரில் பிறந்த அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

சமூக நீதிக்காக பெரியார் செய்த பிரச்சாரங்களினால் ஈர்க்கப்பட்ட அண்ணா, 1935ல் நீதிகட்சியில் சேர்ந்தார். பெரியார் நடத்திய குடியரசு, மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக ஈரோட்டில் பணியாற்றினார்.

வருணாஸ்ரமத்தையும், பிராமணீயத்தையும் கடுமையாக விமர்சித்து, ஆரிய மாயை, நீதி தேவன் மயக்கம், கம்பரசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதினார். சாதியத்திற்கும், பெண் அடிமைக்கும் எதிரான நாடகங்களை எழுதி, இயக்கினார்.

1938ல் பெரியார் தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, 4 மாதம் சிறை தண்டனை பெற்றார்.

வேலைக்காரி, ஓர் இரவு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங் களுக்கு கதை வசனம் எழுதி பெரும் புகழடைந்தார்.

பெரியாரோடு சில செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த, அண்ணா, நெடுஞ்செழியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 1949ல் திராவிட கழகத்தில் இருந்து விலகி, திமுகவை தொடங்கினர்.

1962ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, தனது நாவன்மையினால், அனைத்து கட்சி எம்.பி.களையும் கவர்ந்தார்.

ஜன சங்க எம்.பியாக இருந்த வாஜ்பாய் அண்ணாவின் உற்ற நண்பரானார். கொள்கை ரீதியாக இருவரும் நேர் எதிர் துருவங்களாக இருந்த போதும், பரஸ்பர மரியாதை, நட்பு கொண்டனர்.

1963ல் சீனப் போரின் விளைவாக, திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார். 1965ல் ஆங்கிலத்தை ஒழித்து விட்டு, இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக லால் பகதூர் சாஸ்திரி அரசு அறிவித்தது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணா தலைமையினால திமுக முன்னெடுத்து, மத்திய அரசின் அறிவிப்பாணையை வாபஸ் பெறச் செய்தனர்.

1967 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெறும் வெற்றி பெற்ற பின், அண்ணா தமிழக முதல்வரானார். சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.

நில உச்சவரம்பு சட்டத்தில் சீர்திருத்தம் செய்தார்.

தமிழக பள்ளிகளில் இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். 1969 பிப்ரவரியில் புற்றுநோய் காரணமாக காலமானர்.

அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் ஒன்றரை கோடி பேர் குவிந்தனர். இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவானது.

தமிழகத்தில் தேசிய கட்சிகளின் ஆதிகத்தை வீழ்த்தி, திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு வகை செய்த அறிஞர் அண்ணா பிறந்த தினம் 1909, செப்டம்பர் 15.


Next Story

மேலும் செய்திகள்