Viluppuram women issue | காதலியுடன் பைக்கில் சென்ற காதலன்.. பின்னாலே `நிழல்’ போல துரத்திய சைக்கோ
போலீஸ் என கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை-கார் டிரைவர் கைது
விழுப்புரத்தில் போலீஸ் எனக்கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெரம்பலூரில் உள்ள தனது காதலனை தொடர்புகொண்டு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை விழுப்புரம் பேருந்து நிலையம் வருமாறு காதலன் கூறியதை தொடர்ந்து அப்பெண், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு காத்திருந்த தனது காதலனுடன் இருச்சக்கர வாகனத்தில் இளம் பெண் சென்றுகொண்டிருந்த போது அவர்களை பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த இளைஞர் இருவரையும் வழிமறித்து, தான் போலீஸ் எனக்கூறி மிரட்டியுள்ளார். மேலும் காதலனை தாக்கி அனுப்பி வைத்துவிட்டு, அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்ட மர்ம நபர் விழுப்புரம் ஜானகிபுரம் காவலர் குடியிருப்பு அருகே வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே அப்பெண் கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். இதையடுத்து அப்பெண் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்கிரவாண்டி தாலுகா கஞ்சனூரை அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்த லாரன்ஸ் என்பவரை கைது செய்தனர். இவர் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வரும் லாரன்ஸ் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
