ஆட்டோ திருட்டில் இறங்கிய தந்தை, மகன்.. வாடகைக்கு விட்டு கல்லா கட்டிய கில்லாடிகள்.. களவாணி குடுமஸ்தனை தட்டி தூக்கிய போலீஸ்
சமீப நாட்களாகவே தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களில் தங்களுடைய ஆட்டோக்கள் தொடர்ந்து திருடு போவதாக உரிமையாளர்கள் சிலர் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்..
அந்த புகாரை பெற்றுக் கொண்ட தென்காசி காவல் துறையினர் ஆட்டோக்கள் அதிகமாக நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோ ஸ்டேண்டுகள் மற்றும் சாலைகளில் செல்லும் ஆடோக்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணித்து வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஆட்டோ திருடர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் அந்த திருடனை பிடிக்க முடியாமல் போலீசார் திக்குமுக்காடியிருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான் ராஜபாளையத்தில் இரண்டு மர்ம நபர்கள் ஆட்டோ ஒன்றை திருடும் சிசிடிவி காட்சி போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. அந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் அந்த மர்ம நபர்களை பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அதில் தான் இத்தனை நாட்களாக போலீசாருக்கு தண்ணிகாட்டி வந்த பலே ஆட்டோ திருடர்கள் இவர்கள் தானென்று தெரிய வந்திருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்கள், மைதீன் மற்றும் அவரது மகன் முகமது ராஜா. இவர்களது சொந்த ஊர் தென்காசி. இவர்களது முழு நேர தொழிலே திருட்டு தான், மைதீன் மேல் 10 வருடத்திற்கு முன்பு சைக்கிள் திருட்டு வழக்கும், மகன் முகமது ராஜா மீது பைக் திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளன.
அதோடு மைதீனுக்கு மொத்தம் ஏழு மனைவிகள். அதில் நான்காம் தாரத்து மனைவியின் மகன் தானிந்த முகமது ராஜா.
பொதுவாக வாகன திருட்டில் ஈடுபடுபவர்கள், திருட்டு வண்டியை உடனடியாக யாரிடமாவது விற்று விடுவார்கள். அல்லது அக்குவேர் ஆணிவேராக பிரித்து அதை எடைக்கு போட்டு விடுவார்கள். ஆனால் இந்த இருவர் கூட்டணி, தாங்கள் திருடும் ஆட்டோக்களின் நம்பர் பிளேட்டை மட்டும் மாற்றி, வேறு நகரங்களில் வாடகைக்கு விட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் இவர்களின் கைவரிசை தென்காசி மாவட்டத்தில் அதிகரிக்கவே, மைதீனையும் முகமதுராஜாவையும் பிடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் தென்காசி மாவட்ட போலீசாருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதை அறிந்து கொண்ட இந்த இருவர் கூட்டணி, சிறிது காலம் ஆட்டோ திருட்டிற்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்.. சந்தேகம் வராமல் இருப்பதற்காக தண்ணீர் பேரல் ஒன்றை லோடு ஆட்டோவில் வைத்து ஓட்டி வந்திருக்கிறார்கள்..
இந்நிலையில் தான் முகமது ராஜாவுக்கு சமீபத்தில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கிறது. குடும்ப செலவுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில் தந்தையுடன் சேர்ந்து மீண்டும் அந்த ஆட்டோ திருட்டை கையிலெடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.. இதுவரை எத்தனை ஆட்டோக்களை இது போல் திருடி நம்பர் பிளேட்களை மாற்றி கைமாத்தி விட்டிருக்கிறார்கள். இவர்களின் பின்னால் வேறு யாதேனும் திருட்டு மாபியா இருக்கிறதா.. என தென்காசி கிளைச் சிறையில் வைத்து விசாரித்து வருகிறார்கள்..
