சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியர்கள் தலைமறைவு
சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி போலீசாரால் சம்மன் வழங்கப்பட்ட நிலையில், அதனை பெறாமல் அவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட 3 வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவசங்கர் பாபாவிற்கு உதவிய பள்ளி ஆசிரியர், ஆசிரியை மற்றும் ஊழியர்களுக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளது. இந்நிலையில், தொடர்புடைய ஆசிரியர்கள் அனைவரும் சம்மனை பெற்றுக்கொள்ளாமல், வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளனர். முதற்கட்டமாக 5 பேருக்கு சம்மன் அனுப்பபட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க அவர்கள் சம்மன் பெறாமல் உள்ளனர். இதனையடுத்து ஆசிரியை காயத்ரி, பிரவீனா உள்ளிட்டவர்களின் வீட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்களை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
