

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கடந்த 1ம் தேதியன்று கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 10ம் நாளான, திருக்கார்த்திகை தினத்தன்று அதிகாலையில், கோவிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாலை 5மணி அளவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கோவிலின் முன்பாக எழுந்தருளினர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருகார்த்திகையையொட்டி லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டன. கடந்த 4ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கிய கார்த்திகை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று கோவில் முழுவதும், பக்தர்களால் லட்ச தீபம் ஏற்றப்பட்டதால், விளக்குகளின் வெளிச்சத்தால் கோவில் ஜொலித்தது. இதனையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, கீழமாசி வீதி தேரடி அருகே, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா
திருகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில், தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, மலை மீதுள்ள தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலைகளால் செய்யப்பட்டிருந்த சொக்கப்பனை தீயிட்டு எரிக்கப்பட்டது. விழாவை காண வந்திருந்த பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பிய முருகனை வழிபட்டனர். இந்த விழாவில், அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், கடந்த 2ம் தேதியன்று கார்த்திகை விழா தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பெரிய அண்டாவில் 300 லிட்டர் நெய், 20 கிலோ கற்பூரம், 600 மீட்டர் திரியுடன் தீபம் ஏற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தீப விழாவையொட்டி, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.