Tree Aadhar| தமிழக அரசு கொண்டு வரும் பிரத்யேக `ஆதார்’ - இனி எல்லாமே விரல் நுனியில்..
#treeaadhar #aadhar #tntreeaadharcard #cmvijay #tngovt
தமிழக அரசு கொண்டு வரும் பிரத்யேக `ஆதார்’ - இனி எல்லாமே விரல் நுனியில்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், புயல் காலத்தில் அபாயகரமான மரங்களைக் கண்டறியவும் 'நகர்ப்புற மரங்கள் தகவல் அமைப்பு 2.0' திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது... அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் மரங்களின் தேவையைச் செயற்கையாகப் பூர்த்தி செய்ய முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 1 கோடி மரங்களுக்குப் பிரத்யேக 'டிஜிட்டல் ஆதார்' எண் வழங்கும் புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. சாலை விரிவாக்கம், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகர்ப்புறங்களில் மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழலும், மனிதர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையை மாற்றும் வகையில், நகர்ப்புற மரங்கள் தகவல் அமைப்பு 2.0 (Urban Trees Information System 2.0) என்ற அதிநவீனத் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 1 கோடி மரங்கள் துல்லியமாகக் கணக்கெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு மரத்திற்கும் பிரத்யேக 'டிஜிட்டல் ஆதார்' எண் வழங்கப்பட்டு, அந்த மரம் அமைந்திருக்கும் இடம், புகைப்படம், மரத்தின் பெயர், உத்தேச வயது, உயரம் மற்றும் அந்த மரத்தால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் மென்பொருளில் பதிவு செய்யப்படும். இதனால், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மரங்களின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இத்திட்டத்தை அமல்படுத்தத் தகுதியான மென்பொருள் நிறுவனங்களுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், விருப்பமுள்ள நிறுவனங்கள் வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்துப் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி, சென்னை போன்ற பெருநகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க மரங்கள் இல்லாததே முதன்மை காரணம் என்றும், எங்கு மரங்கள் இல்லை, எங்கு புதிய மரங்களை நட வேண்டும் என்பதைக் கண்டறிய இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்றும் தெரிவித்தார்.. மேலும், புயல் மற்றும் மழைக்காலங்களில் எந்தெந்த மரங்கள் விழும் அபாயத்தில் உள்ளன என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், சாப்ட்வேரில் கணக்கில் உள்ள மரம் திடீரெனக் காணாமல் போனாலோ அல்லது வெட்டப்பட்டாலோ உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் சென்றுவிடும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, தங்கள் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டால், அதனை பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து செயலி வழியே பதிவேற்றிப் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் நகர்ப்புற மரங்கள் அனைத்தும் அரசின் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
