திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் தற்கொலை

திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் தற்கொலை
Published on

கன்னியாகுமரியை உலுக்கிய புது மணப்பெண் தற்கொலை வழக்கில், போலீசாரின் கைதுக்கு பயந்து மாமியாரும் தற்கொலைக்கு முயன்றிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

வீட்டை விட்டு துரத்தி... தன்னை மாமியார் வாழா வெட்டியாய் ஆக்க நினைப்பதாக கூறி, திருமணமான ஆறே மாதங்களில் இப்பெண் கதறியதும், பின் இவரின் உயிர் பறிபோனதும் மனதை ரணமாக்கி இருக்கிறது...

தனக்கும் தன் கணவருக்கும் இடையில் ஒரு பிரச்சினையும் இல்லை அம்மா... என தழுதழுக்கும் குரலில் ஆடியோவில் பேசியவர்தான் இந்த சுருதி..

கோவையை சேர்ந்த இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் மேட்ரிமோனி மூலம் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்திருக்கிறது..

திருமணமானதிலிருந்தே, சுருதியை மன ரீதியாக துன்புறுத்தியும், மன உளைச்சலுக்கு ஆளாக்கியும் அவரது மாமியாரான செண்பகவள்ளி வீட்டை விட்டு துரத்த முயன்று வந்ததாக கூறப்படுகிறது..

மகனுக்கு பக்கத்தில் உட்காரக் கூடாது, வீட்டில் தன் கண் முன் மகனுடன் பேசக்கூடாது, நீண்ட நேரம் ஒரே அறையில் இருவரும் இருக்க கூடாது, எச்சில் தட்டில்தான் சோறு சாப்பிடவேண்டும், கூடவே வரதட்சணை கொடுமை என்று சுருதியை அவர் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது...

இதன் உச்சகட்டமாக, மருமகளை வீட்டை விட்டு துரத்தியடிக்க செண்பகவள்ளி ஒருபக்கம் முயன்று வந்ததாகவும், மறுபக்கம் தான் வாழாவெட்டியாய் இருப்பதை என் பெற்றோர் பார்க்ககூடாது சுருதி போராடி வந்ததாகவும் சொல்லப்படுகிறது...

ஒரு கட்டத்தில் மனமுடைந்துபோன சுருதி... இந்த ஆடியோவை தன் குடும்பத்தாருக்கு அனுப்பி விட்டு தற்கொலை செய்திருக்கிறார்...

"என்னை துரத்தியடித்து வாழா வெட்டியாக்க நினைக்கிறார் மாமியார்"

இந்த சம்பவத்தில், தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகாரளித்திருக்கும் சுருதியின் தந்தை, திருமணத்தின்போது.. 45 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் என மருமகன் வீட்டார் கேட்டதையெல்லாம் கொடுத்ததாக மனமுடைந்து பேசியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது...

"என்னால் முடிந்த அளவிற்கு எல்லாமும் செய்தேன்"

"காலையில் எனது மகள் வாய்ஸ் மெசேஜ் செய்திருந்தார்"

"வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி டார்ச்சர் செய்துள்ளனர்"

வாட்ஸ் அப் ஆடியோ ஆதாரம், மகளை இழந்த குடும்பத்தாரின் பகீர் குற்றச்சாட்டு என கிட்டத்தட்ட போலீசாரின் விசாரணை வளையத்தில் சுருதியின் மாமியார் செண்பகவள்ளி வசமாக சிக்கியதாக தெரிகிறது..

இதனால், போலீசாரின் கைதுக்கு பயந்து அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

செண்பகவள்ளி மருத்துவமனையில் உள்ள நிலையில், போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். மருமகளின் தற்கொலை, மாமியாரின் தற்கொலை முயற்சி என இந்த வழக்கின் ஒட்டுமொத்த பின்னணியும் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது...

X

Thanthi TV
www.thanthitv.com