பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்...

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் - போலீசார் தடுத்த‌தால் பரபரப்பு...

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாமல், உடனடியாக கடுமையான தண்டனை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

பொள்ளாச்சி விவகாரம் : அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வகுப்புக்கு திரும்புமாறு அறிவுறுத்திய பேராசிரியர்களுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : அரசாணையை எரித்து ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டதை கண்டித்து புதுச்சேரி திராவிட விடுதலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்த தமிழக அரசின் அரசாணையை தீயிட்டு எரித்து, முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com