சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது - கோயில் செயல் அதிகாரிகள் மனு

தமிழ்நாடு கோயில் செயல் அதிகாரிகள் பேரவை மனுவில், தமிழகத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட சிலைகள் இந்து அறநிலையத்துறையின் சிறப்பான கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளதாகவும், சிலை திருட்டுகள் என்பது இப்போது நடந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது - கோயில் செயல் அதிகாரிகள் மனு
Published on

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு கடந்த 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்தது.

வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதை நியாயப்படுத்தி தமிழக அரசும் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், அரசின் முடிவுக்கு ஆதரவாகவும், வழக்கில் தங்களையும் இணைக்க கோரியும், தமிழ்நாடு கோயில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட சிலைகள் இந்து அறநிலையத்துறையின் சிறப்பான கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளதாகவும், சிலை திருட்டுகள் என்பது இப்போது நடந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை சிறந்த அதிகாரி என நீதிமன்றம் பாராட்டியது என்பதற்காக மற்ற அதிகாரிகள் நேர்மையற்றவர்கள் அல்ல என்றும், சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு குற்ற செயலை ஒரு குறிப்பிட்ட அதிகாரி மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பது மற்ற அதிகாரிகளை குறைத்து மதிப்பீடு செய்வது போல் ஆகும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com