Sridevi | Jhanvi Kapoor | நடிகை ஸ்ரீதேவி வழக்கில் திடீர் திருப்பம்
நடிகை ஸ்ரீதேவி சொத்து வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான நிலம் தொடர்பான வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 1988-ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் 4.77 ஏக்கர் நிலத்தை நடிகை ஸ்ரீதேவி வாங்கியுள்ளார். இந்தச் சொத்தில் தங்களுக்குப் பங்கு இருப்பதாகக் கூறி, சம்பந்த முதலியார் என்பவரின் வாரிசுகள் என உரிமை கோரும் மூன்று பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவைச் செங்கல்பட்டு நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், வாரிசு எனக் கோருபவர்கள் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும், சட்டபூர்வ வாரிசு இல்லாதவர்கள் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, வழக்கின் இறுதி விசாரணையை மார்ச் 26-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அதுவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்."
