விண்வெளி டூ பூமி `வயர்லெஸ் கரண்ட்’ - உலகை மிரள வைக்கும் ஜப்பான் ஐடியா
விண்வெளி டூ பூமி `வயர்லெஸ் கரண்ட்’
போன் சிக்னல் போல கரண்டும் வருமா!
உலகை மிரள வைக்கும் ஜப்பான் ஐடியா
சூரிய வெப்பத்தை பயன்படுத்தி விண்வெளியிலேயே மின்சாரத்தை தயாரித்து அதை பூமிக்கு அனுப்பும் புதிய தொழில் நுட்பத்தை ஜப்பான் சாத்தியமாக்க உள்ளது. கற்பனையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக உங்களுக்கு தோன்றலாம்.
ஆனால், ஜப்பானின் இந்த முயற்சி உலக நாடுகளின்
கவனத்தை ஈர்த்துள்ளது.
மின்சாரம் இல்லையென்றால் இந்த உலகமே ஸ்தம்பித்துவிடும்
என்று சொல்லும் அளவுக்கு அதன் தேவை எல்லா இடங்களிலும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
பொதுவாக மின்சாரம் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது. அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், காற்றாலை, சூரிய மின் சக்தி ஆகிய முறைகள் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதலாவது 1. அனல் மின் நிலையங்கள்:
நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றை எரித்து அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
2வது, நீர் மின் நிலையங்கள்:
வேகமாகப் பாயும் நீரின் இயக்க ஆற்றலை பயன்படுத்தி
மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
3. அணு மின் நிலையங்கள்:
அணுவைப் பிளந்து அதன் மூலம் வெப்பத்தை உருவாக்கி,
மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
4. காற்றாலை மின் உற்பத்தி:
வேகமாக வீசும் காற்றின் மூலம் டர்பைனை
சுழற்றி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
5. சூரிய மின் உற்பத்தி: சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வீடுகளின் மேலேயே சோலார் தகடுகள் பொருத்தி வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை தயாரித்துக்கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது.
இப்படி உலகம் முழுவதும் பல நாடுகளில் பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்படாலும் கூட செலவினம் அதிகம் உள்ளிட்ட பல காரணங்களால் மாற்று வழிகளை தேடும் முயற்சியில் பல நாடுகளும் இறங்கியிருக்கின்றன.
இதில் ஜப்பான் எல்லாவற்றிற்கும் ஒருபடி மேல போய், சூரிய வெப்பத்திலிருந்து, விண்வெளியிலேயே மின் உற்பத்தி செய்து,
அதை வயர்லெஸ் மூலம் பூமிக்கு கொண்டுவரும் அதி நவீன தொழில்நுட்பத்தை விரைவில் சோதித்துப் பார்க்கவுள்ளது.
( விண்வெளியில் இருந்து பூமிக்கு கம்பிகள் தொங்கவிடப்பட முடியாததால் அது எப்படி நடக்கும்? இது மைக்ரோவேவ் வடிவத்தில் இருக்கும், இது ஒரு ஆற்றல் கற்றை போல வயர்லெஸ் முறையில் அனுப்பப்பட்டு ஆண்டெனாக்களால் பிடிக்கப்படும்.)
இது நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஜப்பான் ஏற்கெனவே செய்துவிட்டது.
விரைவில் 22 சதுர அடி அகலம் கொண்ட சோலார்
பேனலுடன் கூடிய 180 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்
Low earth orbit- என்றழைக்கப்படும் பூமியின் தாழ்வு
வட்ட சுற்றுப்பாதைக்கு செலுத்தப்படவுள்ளது. இந்த
பேனல் சூரிய ஒளியை கிரகித்து, அதனுள்ளிருக்கும்
பேட்டரி சார்ஜ் செய்யப்படும்.
சுமார் 180 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோளாக இருக்கும், இது 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சுமார் 1 கிலோ வாட் மின்சாரத்தை பூமிக்கு டிரான்ஸ்பர் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த திட்டத்திற்கு ஜப்பானிய மொழியில் சூரியன் என்று பொருள்படும் OHISAMA என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும்
ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவப்படலாம் என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான சூரிய மின்கலங்களைப் பயன்படுத்தி, ஆற்றல் மின்சாரமாக மாற்றப்பட்டு கம்பிகள் வழியாக கடத்தப்படுகிறது. இருப்பினும், விண்வெளியில் இருந்து மின்சாரத்தை அனுப்பும்போது அது சாத்தியமில்லை. எனவே, மின்சாரத்தை மைக்ரோவேவ்களாக மாற்றி, வயர்லெஸ் முறையில் அது பூமிக்கு வந்து சேரும். இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆண்டெனாக்கள் இதனை ரிசீவ் செய்துகொள்ளும்.
இந்த செயற்கைக்கோள் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வரும். ஏனெனில் நுண் அலைகளைப் பிடிக்க, பல கிலோ மீட்டர் ஓடும் ஆண்டெனா தேவைப்படுகிறது. இருப்பினும், இந்த முறையின் சாத்தியக்கூறுகளை அறிந்து கொள்வதே இப்போதைக்கு நோக்கமாக உள்ளது. எனவே ஒரு சிறிய ஆண்டெனா போதுமானதாக இருக்கும். சுவாவில் 600 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ள 13 ரிசீவர்கள் தயார் நிலையில் உள்ளன.
தற்போது பூமிக்கு அனுப்பப்படும் ஆற்றல் ஒரு பாத்திரங்கழுவி இயந்திரத்தை ஒரு மணி நேரம் இயக்க மட்டுமே போதுமானதாக இருக்கும். இருப்பினும் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் விண்வெளியில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி
செய்யும் இந்த தொழில்நுட்பத்தை பிரதானமாகப் பயன்படுத்தலாம்.
விண்வெளியில் சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி உற்பத்தி செய்வது இது முதல் முறை அல்ல. மே 2020-ல், அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி ஆய்வகம் (NRL) X-37B சுற்றுப்பாதை சோதனை வாகனத்தை ஏவியது, இது விண்வெளியில் சூரிய சக்தியை மைக்ரோவேவ் ஆற்றலாக வெற்றிகரமாக மாற்றி
வயர்லெஸ் மூலம் பூமிக்குத் திருப்பி அனுப்பியது.
இதனிடையே, விண்வெளியில் சூரிய ஆற்றலை செயற்கைக்கோள் மூலம் கிரகித்து பூமிக்கு வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் அனுப்பும் இந்த முறைக்கு செலவுகள் அதிகம் என்பதால் இது நடைமுறையில் பலனளிக்காது என்று நாசா கைவிட்டுவிட்டது.
இந்த முறைக்கு ஒரு கிலோவாட்- Hour-க்கு 20 ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பூமியில் சூரிய மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஒரு கிலோ வாட்-மணி நேரத்திற்கு 1 ரூபாய் 70 காசுகள் மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
