தாயை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மகன்
மது போதையில் பெற்ற தாயை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட மகன் : தப்பிக்க மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார்
ஓசூர் அருகே பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த மகன் பெற்ற தாயை கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு அதனை மறைப்பதற்காக வீட்டில் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளார். 50 அடி உயர மரத்தின் மீது ஏறி பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அய்யன்துரை (67) இவரது மனைவி பூபதி (60) இவர்களுக்கு பரமசிவம், வெள்ளையன், சேட்டு மற்றும் சின்னதம்பி ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இதில் பரமசிவம் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாகி போதையில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் மது குடித்துவிட்டு தொடர்ந்து அவரது மனைவியை துன்புறுத்தி வந்ததால் அவரது மனைவி பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான பரமசிவம் போதையில் தனது தந்தை மற்றும் தாயிடம் அடிக்கடி தகராறு செய்து அவர்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த பரமசிவம் தனது தந்தை அய்யன் துரையிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த அய்யன் துரை மகனுக்கு பயந்து காட்டுப்பகுதிக்கு ஓடி உள்ளார். அதனைத்தொடர்ந்து பரமசிவம் வீட்டிற்கு சென்று கூலி வேலை செய்து விட்டு வந்த அவரது தாய் பூபதியிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பரமசிவம் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அந்த கொலையை மறைப்பதற்காக வீட்டில் பூபதி தூக்கு மாட்டி இறந்தது போல அவரது உடலை வீட்டில் தூக்கில் தொங்க விட்டுள்ளார். நீண்ட நேரத்துக்கு பின் வீட்டிற்கு சென்ற அய்யன் துரை வீட்டில் தனது மனைவி பூபதி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கிராம பொது மக்களிடம் கூறியுள்ளார். தாயை கொன்று விட்டு அந்த பகுதியில் நின்ற பரமசிவத்தை கிராம மக்கள் சுற்றி வளைத்து தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடிய பரமசிவம் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த 50 அடி உயரமுள்ள கடுக்காய் மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டார்.
தகவல் அறிந்து சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பரமசிவம் தந்தையை தாக்கியதும் பெற்ற தாயை தாக்கி கொன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் தேடிய நிலையில் அங்கிருந்த மரத்தில் ஒளிந்திருந்த பரமசிவத்தை போலீசார் சமாதானமாக பேசி கீழே இறக்கி கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
