வரும் டிசம்பர் மாதம் 38 மழலையர் பள்ளிகளில் montessorri கல்வித் திட்டத்தை தொடங்கவும், அடுத்த கல்வி ஆண்டில் மேலும் 40 மழலையர் பள்ளிகளில் இந்த முறை பயிற்சிகள் தொடங்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சைதாப்பேட்டை மகளிர் மேல்நிலை பள்ளியில் அமைந்துள்ள மழலையர் பள்ளியில் ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு 178 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மழலையர் வகுப்புகளை பொறுத்த வரை தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக, மழலையர் வகுப்புகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதாகவும் ஆணையர் கூறினார். மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட 24,000 காலி மனைகளில் ஆழ்துளை கிணறுகள் உள்ளனவா என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளதாகவும், ஆழ்துளை கிணறுகள் இருந்தால் உரிமையாளர்களை கொண்டு அவை மூடப்படும் என்று தெரிவித்தார்.