யானைக்கூட்டம் சேர்க்காததால் சாலையில் சுற்றித்திரிந்த குட்டி யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில், சில நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து வெளியேறிய பெண் யானை குட்டியை, வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். ஆனால், யானைக்கூட்டம் சேர்த்து கொள்ளாததால் அந்த யானைகுட்டி மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனச்சாலையில் சோகத்துடன் சுற்றித்திரிந்தது. இதனையடுத்து, யானைகுட்டியை மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டுசென்ற வனத்துறையினர், அதற்கு நாள்தோறும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் கொடுத்து பராமரித்து வந்தனர்.
இதனிடையே, இன்று வனத்துறையினர், குட்டியானையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைக்கூட்டம் மீண்டும் சேர்க்காவிட்டால், குட்டியானை வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
