சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை

சேலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத‌தால், அரசு கட்டி கொடுத்த இலவச வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்திரபிள்ளை வலசு என்ற கிராமத்தில், சமத்துவபுரம் ஒன்றை 2013 தமிழக அரசு உருவாக்கியது.

1.93 லட்சம் ரூபாய் மதிப்பில் 60 வீடுகள், 2.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 வீடுகள் என மொத்தம் நூறு வீடுகள் அந்த சமத்துவபுரத்தில் கட்டப்பட்டன. 6 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. இந்த வீடுகள் 2013 ஆம் ஆண்டு பயனுக்கு வந்த‌து. ஆனால் குடிதண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை... இதனால் அங்கு குடியிருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு குடியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கு குடியிருக்கும் மக்களும் தங்களின் குடிநீர் தேவைக்கு பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் வசிக்காத காரணத்தால், பராமரிப்பு இன்றி காணப்படும் வீடுகள், புதர் மண்டி காட்சியளிக்கின்றன. அதிகாரிகள் பலர் வருவதும் உறுதிகொடுத்துவிட்டு, செல்வதும் வாடிக்கை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சந்திரபிள்ளை வலசு சமத்துவபுரத்தில் இப்போது இருக்கும் ஒரு சிலரும் தண்ணீர் பிரச்சினையால் வீடுகளை விட்டு விட்டு, வேறு பகுதிகளுக்கு இடம் பெற இருப்பதாக கூறி வருகின்றனர். எனவே அரசு தலையிட்டு, விரைவில், குடி தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை...

X

Thanthi TV
www.thanthitv.com