உள்ளாடைக்குள் ஃபோன்..தொப்பிக்குள் கஞ்சா.. கைதிகளுக்கு காவலர் சப்ளை - சிறைக்குள் பார்ட்டைம் ஜாப்
சிறைக்கைதிகள கண்காணிக்க வேண்டிய காவலரே, அவங்களுக்கு கஞ்சா, செல்ஃபோன், சிம்கார்டுனு கேட்டத எல்லாம் வாங்கிக் கொடுத்து பச்சக்கிளி மாதிரி பத்தரமா பராமரிச்சு வந்திருக்காரு. கைதிகள் கொடுத்த காசுல அழகிகளோடு உல்லாசமா திரிஞ்ச கருப்பு ஆடு, ஜெயிலரிடம் சிக்கி உப்புகண்டமான உண்மைகதை இது...
வானத்தை முட்டும் மதில் சுவர்கள், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார். உச்சத்தில் இருந்து கவனிக்க வாட்ச்சிங் டவர்.
வெளி உலகத்தின் பார்வை புக முடியாத சிறைச்சலை எப்போதுமே ஒரு தனி உலகமாகவே இயங்கி வருகிறது.
கொடூர குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, பிக் பாக்கெட்டாக இருந்தாலும் சரி எலோரும் ஒன்று தான் என சிறைச்சட்டம் சொன்னாலும், நடை முறையில் பல தில்லாலங்கடி வேலைகள் அரங்கேறுவதை அனுதினமும் செய்திகளில் பார்க்க முடிகிறது.
செல்வாக்கு இருந்தால் சிறைச்சாலையும் பஞ்சு மெத்தைதான் என முடிவெடுத்து சிலர் செல்லுக்குள்ளேயே சொகுசு வாழ்கை வாழ்வதும் உண்டு.
அப்படித்தான் கடந்த சில மாதங்களாக சேலம் சிறை சாலையில் கஞ்சா, செல்ஃபோன் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.
சிறை வார்டன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.என்னதான் கெடுபிடிகள் போட்டாலும் அடுத்தடுத்து சட்டவிரோதமாக, செல்ஃபோன்களும், கஞ்சாவும் பரிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, சிறைக்குள் செல்ஃபோன் பயன்படுத்திய பிடிபட்ட முபாரக் என்ற கைதியிடம் சிறைகாவலர்கள் துருவி துருவி விசாரித்திருக்கிறார்கள். அதில் தான் இதே ஜெயிலில் காவலராக இருந்து வந்த சண்முக குமார் தான் தனக்கு சப்ளேயர் என வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார் முபாரக்.
ஆனாலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால், ஜெயிலர் வினோத் தலைமையிலான தனிப்படை போலீசார் முபாரக்கின் தாயாரிடம் நடத்திய
விசாரணையில், அவர் காவலர் சண்முக குமாருக்கு பணம் அனுப்பிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
அதோடு மற்றொரு கைதியான கோழிபிரகாஷ் என்பவருக்கும் செல்ஃபோன், கஞ்சா போன்ற பொருட்களை
சண்முக குமார் சப்ளே செய்தது தெரியவரவே அவரது தம்பியை பிடித்து விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது தான் சண்முக குமார் இதை ஒரு தொழிலாகவே செய்துவந்த பகீர் உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
செல்வாக்கான கைதிகளிடம் பழக்கம் வைத்துக் கொண்ட சண்முககுமார்,
அவர்களது உறவினர்களை தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொள்வார் பின், கைதிகளுக்கு தேவையான பொருட்களை அவரே எடுத்து வந்து உள்ளே சப்ளே செய்திருக்கிறார்.
குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வெப்சைட்டுகளில் 1000, 2000 ரூபாய்க்கு விற்பனையாகும் கையடக்க செல்ஃபோன்களை வாங்கி, அதை 15000 ரூபாய்க்கு சிறைகைதிகளுக்கு விற்றிருக்கிறார். மற்ற காவலர்களுக்கும், ஜெயிலருக்கும் தெரியாமல் இருக்க,
கஞ்சா பொட்டலங்களை தனது தொப்பிக்குள்ளும், செல்ஃபோன்களை உள்ளாடைகளிலும் மறைத்து வைத்து எடுத்து சென்றிருக்கிறார்.
பல வருடங்களாக இந்த பிஸ்னஸை பில்ட் செய்த சண்முக குமார், அதன் மூலம் சம்பாதித்து சொந்த வீடு, சொத்து என செட்டிலானதும் தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக கோழி பிரகாசுக்கு செய்த உதவிக்காக அவரது தம்பி, சண்முக குமாருக்கு ஏற்காட்டில் சொகுசு பங்களாவில்
வாராவாரம் விருந்து கொடுத்திருக்கிறார்.
மது, மாது என அழகிகளோடு உல்லாசமாக வாழ்ந்து வந்த சிறைகாவலர்
சண்முக குமாரிடம் பத்துக்கு மேற்பட்ட கைதிகள் கஸ்டமர்களாக இருந்துள்ளதும் தெரியவந்திருக்கிறது.
