தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
Published on

சென்னை : நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, வடபழனி, போரூர், பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளி்ல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பரவலாக பலத்த மழை - மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக உத்திரமேரூர், வாலாஜாபாத், ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கனமழை பெய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த கனமழை காரணமாக, ஏரி, குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பரவலாக மிதமான மழை - மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக, கிருஷ்ணன்கோவில், மம்சாபுரம், வன்னியம்பட்டி, வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, முக்கூடல், அம்பாசமுத்திரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

வடகிழக்கு பருவமழை துவங்கி பத்து நாட்களுக்கு மேலாகியும் மழை பெய்யாத நிலையில், கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல் : நாள் முழுவதும் விட்டு விட்டு பெய்த மழை

கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளில், நாள் முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பியது. இந்த ஏரியின் நீர், ஏரிச் சாலையில் உள்ள கடைகளுக்குள் புகுந்தது. இதனை அடுத்து நகராட்சி சார்பில் ஏரியின் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக மேல்மலை கிராமமான மன்னவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

நாள் முழுவதும் பெய்த மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கும்பகோணத்தில் நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக, அங்குள்ள சுவாமிமலை, தாராசுரம், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் வெளுத்து வாங்கிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com