

சென்னையில் நள்ளிரவில் கனமழை
வடகிழக்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கிய நிலையில், சென்னையில் நள்ளிரவில் கனமழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, புரசைவாக்கம், வியாசர்பாடி, விமான நிலையம், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை நீடித்து வருகிறது.
தொடர் கன மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது அதனை தொடர்ந்து பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கனமழை
நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கன மழை காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் துறைமுகத்தில் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணத்தில் 2 மணி நேரமாக கனமழை
கும்பகோணத்தில் நேற்று காலையில் இருந்து தொடர்ந்து, சாரல் மழை பெய்த நிலையில், இரவு ஒன்பது மணிக்கு மேல் கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த மழை, நள்ளிரவை கடந்தும் பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குன்னுார் : இரவில் தொடர்ந்து பெய்து வரும் மழை
நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பகல் நேரங்களில் விட்டு விட்டும், இரவில் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மழை காரணமாக மேட்டுப்பாளையம் மலை பாதையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும், மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொடைக்கானலில் பரவலாக பெய்யும் மழை
கொடைக்கானல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நட்சத்திர ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோலா அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு வந்த சுற்றுவாப்பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.