தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையும் அதன் பாதிப்புகளும்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை
Published on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இரண்டு நாள் இடைவெளிக்கு பின்னர் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொரட்டூர்

பழமையான பிரமாண்ட மரத்தை சாய்த்த கனமழை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மணமேடு கிராமத்தில், கனமழை காரணமாக 150 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் 2 வீடுகளும் மின் கம்பங்களும் சேதமடைந்தன. பிரமாண்ட மரம் விழுந்த போது யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காணிமேடு ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த காணிமேடு பகுதியில் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புதுப்பேட்டை, அகரம், மண்டகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சூனாம்பேடு பகுதி வழியாக 25 கிலோமீட்டர் சுற்றி மரக்காணம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீர், நெல் வயல்களை சூழ்ந்துகொண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

137 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கின

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 137 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். நீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அரசுக்கு அறிக்கை அளித்து நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார். மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர் மழையால் நீர் நிலைகளில் உயரும் நீர்மட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர் நிலைகளில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழை பெய்வது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மற்றும் சோளங்கள் கடும் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கெங்கவல்லி வலசைகல்பட்டி ஏரி நிரம்பியது

சாலையோரத்தில் சிக்கிக் கொண்ட கனரக வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாறு பாலம் அருகே, சாலை பணிக்காக கொட்டப்பட்டிருந்த களிமண், மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இந்த சகதியில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனால் 5 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன், போலீசார் வாகனங்களை மீட்டனர்.

வேறு பகுதி ஏரிக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வேறு பகுதியில் உள்ள ஏரிக்கு திருப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர்- அம்மாபேட்டை- பவானி பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டவர்கள், சமரசம் செய்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கனமழையால் சேதமடைந்த தற்காலிக பாலம்

பழனி அருகே கனமழையால் சேதமடைந்த தற்காலிக பாலம் சீரமைக்கப்பட்டதை அடுத்து 2 நாட்களுக்கு பின் வாகன போக்குவரத்து தொடங்கியது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் சண்முகம்பாறை சுள்ளிக்காத்து ஓடை மீது அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் சேதமடைந்தது. இதனால் நெய்க்காரப்பட்டி - புளியம்பட்டி இடையே கடந்த 2 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.

தொடர் மழை - நெற்பயிர்கள் சேதம்

கும்பகோணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள பட்டிஸ்வரம், பம்பபடையூர் உள்ளிட்ட பல ஊர்களில் சுமார் 100 ஏக்கரில் நடவு செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நந்தியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புக்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. கழிவுநீருடன் கலந்த மழைநீரிலேயே குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சென்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மழைநீர் உடனடியாக வெளியேற கால்வாய்களை முறைப்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியது

X

Thanthi TV
www.thanthitv.com