உயர்மின் கோபுரம், டிரான்ஸ்பார்மர் மீது ஏறி போராட்டம்
பல்லடம் அருகே கடனை திருப்பி செலுத்தாத வீடு மற்றும் தறி குடோனுக்கு சீல் வைக்க வந்த வங்கி அதிகாரிகளை கண்டித்து ட்ரான்ஸ்பார்மர் மற்றும் உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தாரால் பரபரப்பு...
இரண்டு மணி நேரம் போராடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தறி குடோன் அமைப்பதற்காக 2022 ஆம் ஆண்டு நிலத்தை அடமானம் வைத்து கோவையில் உள்ள தனியார் வங்கியில் 97 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 56 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 58 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்தாத நிலையில் வங்கியில் இருந்து பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிலையில் ராஜகோபால் தரப்பில் பணம் செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின் பெயரில் நிலம் மற்றும் தறி குடோன் ஆகியவற்றை சீல் வைப்பதற்காக இன்று காவல்துறை பாதுகாப்போடு வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜகோபாலின் வீட்டிற்கு வந்தனர்.
முறையான நோட்டீஸ் கொடுக்கவில்லை என கூறி வங்கி அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க முடியாது என ராஜகோபாலின் குடும்பத்தார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உதவியோடு வங்கி அதிகாரிகள் தறிகுடோன் மற்றும் ராஜகோபாலின் வீடுகளுக்கு சீல் வைத்த நிலையில் வங்கி அதிகாரிகளை கண்டித்து ராஜகோபால் மற்றும் அவரது தங்கை ஆகிய இருவரும் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் உயர்மின் கோபுரத்தில் ஏறி நிலத்தை அளவீடு செய்யக்கூடாது எனவும் தறி குடோனுக்கு சீல் வைக்க கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தறி குடோன் மற்றும் வீடுகளுக்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்ய முறையான நீதிமன்ற நோட்டீஸ் வழங்குகிறோம் எனவும் நில அளவீடு பணியை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறிய பின் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பல்லடம் காவல்துறையினர் டிரான்ஸ்பார்மர் மற்றும் உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் பத்திரமாக கீழே இறக்கினர்.
வங்கி அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைத்ததால் ராஜகோபாலின் மனைவி அங்கேயே மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
