Coimbatore | 9 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தடை செய்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - ஆவேசமடைந்த உறவினர்கள்
கோவையில், தவறான கருத்தடை சிகிச்சையால் 9 ஆண்டுகளுக்கு பின் கருவுற்ற பெண், மருத்துவமனையின் அலட்சியத்தால்
உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தடை சிகிச்சை செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் கருவுற்றார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது தாயும் சேயும் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதனிடையே, கடந்த மாதம் பரிசோதனைக்கு சென்றபோது கருவில் பிரச்னை ஏற்பட்டதாகவும், கருவை கலைத்தால் தான் சங்கீதாவை காப்பாற்ற முடியும் என்று கூறியதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி சங்கீதா உயிரிழந்த நிலையில், மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனக்கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கீதாவின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
