மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசு சார்பில் தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். புற்றுநோய் காரணமாக கடந்த 21ஆம் தேதி உயிரிழந்த சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரி, பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரபஞ்சனின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனனும் பிரபஞ்சனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரபஞ்சனின் இறுதிச்சடங்கு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரி சன்னியாசி தோப்பில் உள்ள இடுகாட்டில் நடைபெறுகிறது.