

எத்தனை சட்டம் போட்டு தடுத்தாலும் திட்டம் போட்டு திருடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரியவில்லை. புதுப்புது முறையை கொள்ளையர்கள் கையாண்டாலும், அவர்களை கையும் களவுமாக பிடிப்பதில் தமிழக காவல்துறைக்கு ஈடு இணை கிடையாது. இந்த நிலையில், போலீசாருக்கு வந்த ரகசிய தொலைபேசி அழைப்பு, வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் கோவை - பெங்களூர், சென்னை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் கோவை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டு இருந்த உத்தரபிரதேச மாநிலம் பிஜினூரை சேர்ந்த சகில் அகமது மற்றும் ரியா ஹுயூசைன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்துகளில் நகை அல்லது பணம் அதிகமாக வைத்தவர்களை குறி வைக்கும் அவர்கள், பேருந்தில் நான்கு இடங்களில் தனிதனியாக அமர்ந்து கொண்டு வேவு பார்ப்பார்களாம். பின்னர் அனைவரும் தூங்கியவுடன் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு பேருந்து இடையில் நிற்கும் இடத்தில் இறங்கி தப்பி விடுவார்களாம். மேலும் பிஜினூரை சேர்ந்த ஏராளமானோர் தமிழகம் வந்து இத்தகைய திருட்டு தொழில்களில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. கோவையில், கடந்த மாதம் ஆம்னி பேருந்தில் சென்ற பயணியிடம் இருந்து 44 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பிடிபட்டவர்கள் மூலம் விரைவில் துப்பு துலங்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.