மக்கள் திடீர் சாலை மறியல்.. என்ன காரணம்? காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் வேலூர் செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளை குளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .
இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்த நிலையில் கடந்த 2000 வது ஆண்டில் 70 குடும்பங்களுக்கு மட்டும் அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளது.
இந்த நிலையில் மீதமுள்ள 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இது நாள் வரை பட்டா வழங்கப் படாமல் உள்ளது.
பட்டா கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளை குளம் பகுதி மக்கள்,பட்டா வழங்க கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது நாள் வரை அப்பகுதி மக்களின் கோரிக்கை மனு மீது மாவட்ட நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கில் இருந்து வருவதாக ஒரு பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்க மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்து வெள்ளை குளம் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் வெயிலையும் பொருட்படுத்தாமல், காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் அரக்கோணம் செல்லும் பிரதான சாலைக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் .
